சர்வதேச பயணிகளுக்கு இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை: அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரம் அறிவிப்பு
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொடர்பில் இனி எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் இந்த முடிவு தொடர்பில் பிரதமர் ஸ்காட் மோரிசன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், சிட்னியில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிப்பது தொடர்பில் பெடரல் நிர்வாகத்தின் ஒப்புதல் தேவை என்றே தெரிய வந்துள்ளது.
சிட்னி நகரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாக அவுஸ்திரேலியாவிற்கு சர்வதேச பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் என்றே நம்பப்படுகிறது.
இது தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் Dominic Perrottet தெரிவிக்கையில், சர்வதேச பயணிகளை சிட்னியிலும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலும் வரவேற்க முடிவு செய்துள்ளோம், எப்போது முதல் என்பதை எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி அறிவிப்போம் என்றார்.
மேலும், அனைவரையும் ஒன்றாக பாவிக்கவே நாங்கள் விரும்புகிறோம், முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் தாராளமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 2020 மார்ச் மாதம் தொடங்கி சர்வதேச எல்லைகளை அவுஸ்திரேலிய நிர்வாகம் மூடியே வைத்திருந்தது.
இந்த காலகட்டத்தில், சொந்த நாட்டவர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்களுக்கும் மட்டுமே நாட்டுக்குள் அனுமதி அளித்து வந்தது. இருப்பினும், அவர்களின் சொந்த செலவில் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியும் அமுலில் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய எல்லைகள் திறப்பது தொடர்பில் நவம்பர் மாதம் முக்கிய முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக பிரதமர் மோரிசன் கடந்த மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனால் அவுஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாடுகளில் சிக்கியுள்ள அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் நாடு திரும்பவும் வசதியாக இருக்கும் என கூறப்பட்டது.