ப்ளே ஸ்டோரில் இருந்து 3 Appsகளை நீக்கிய கூகுள்! உங்க போனிலிருந்து உடனே தூக்கிடுங்க.. இல்லேன்னா உங்க தகவல் திருடு போயிடும்
கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்தில் இருந்து 3 போட்டோ எடிட்டிங் செயலிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் தளத்தில் நிறையே செயலிகள் தினந்தோறும் பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பல செயலிகளை தினமும் பலரும் அப்டேட் செய்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனிநபர் தகவல்களை தேவையில்லாமல் சேகரித்து தனிநபர் தரவுகளை திருடும் செயலிகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து தடை செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் 150 செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தனி நபர் தரவு பாதுகாப்பு கொள்கைகளை மீறியதாக கூறி கூகுள் நிறுவனம் மேலும் 3 போட்டோ எடிட்டிங் செயலிகளை தன்னுடைய தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளன?
தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மேஜிக் போட்டோ லேப் எடிட்டர்(Magic Photo Lab - Photo Editor'), பிளேண்டர் போட்டோ எடிட்டர் (Blender Photo Editor-Easy Photo Background Editor'), பிக்ஸ் போட்டோ மோஷன் எடிட் 2021 (Pics Photo Motion Edit 2021) ஆகிய செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடைக்கு காரணம் என்ன?
இந்த மூன்று செயலிகளும் சுமார் 3மில்லியன் பயனாளர்களின் தனிநபர் விவரங்களை தரவு பாதுகாப்பு கொள்கையை மீறி பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தரவு பாதுகாப்பு அமைப்பான கேஸ்பர்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த செயலிகளில் வாடிக்கையாளர் தங்களுடைய முகநூல் கணக்கு மூலம் உள் சென்று இருந்தால் அவர்களுடைய பேஸ்புக் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தடை செய்யப்பட்ட மூன்று போட்டோ எடிட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளவர்கள் உடனடியாக தங்களுடைய மொபைலில் இருந்து இந்த செயலிகளை நீக்க வேண்டும். மேலும் உங்களுடைய முகநூல் கணக்கின் கடவுசொல்(பாஸ்வேர்டு) உள்ளிட்டவற்றை மாற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று.