என்னை மன்னித்து விடுங்கள்... மிகவும் துயரமான நாள்: பிரதமர் போரிஸ் ஜோன்சன் உருக்கம்
பிரித்தானியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா மரண எண்ணிக்கை 100,000 கடந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நிலையில் இருந்து மிக விரைவில் நாம் விடுபடுவோம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட புதிய வீரியம் மிக்க கொரோனா பரவல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக 1,631 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், இதுவரை பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 100,162 என பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நேரலையில் பேசிய பிரதமர் ஜோன்சன், இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன்.
இதுவரை அரசு மேற்கொண்ட அனைத்து முடிவுகளுக்கும் நானே பொறுப்பு, என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.
மேலும், கொரோனாவால் உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்த அவர், நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களை நினைவு கூறும் நாம், அதே வேளை, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், உயிர்களை காக்க போராடிய முன்கள பணியாளர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
இனிமேலும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் அரசு இயன்றவை அனைத்தையும் செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை 6.8 மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்தும் பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் வரிசையில் இணைவதாக குறிப்பிட்ட அவர், பிரித்தானியர்களில் 8 பேர்களில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்றார்.