முப்படைகளுக்கு முழு சுதந்திரம்... பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி உறுதி
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடியின் முறை, இலக்குகள் மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க முப்படைகளுக்கு பிரதமர் மோடி முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.
ஆலோசனைகளின் முடிவில்
பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன் நடந்த ஆலோசனைகளின் முடிவில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான அடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு என்றும், இந்திய ராணுவத்தின் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உள்விவகார அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிரதமரின் இல்லத்தில் ஆலோசனை முன்னெடுத்துள்ளனர்.
பிப்ரவரி 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிக மோசமான சம்பவம் பஹல்காம் தாக்குதல் என்றே கூறப்படுகிறது. இதனால், இராணுவ நடவடிக்கை உறுதி என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1,000 பாகிஸ்தானியர்கள்
இதற்கிடையில், திரட்டப்பட்ட தரவுகள் அனைத்தும் மீண்டும் பாகிஸ்தானை குறிவைப்பதாக பாதுகாப்பு முகமைகள் அனைத்தும் தெரிவித்துள்ளன. அத்துடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது ஏற்கனவே பல தூதரக கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. பாகிஸ்தானிய இந்துக்கள் மற்றும் நீண்டகாலம் தங்க அனுமதி பெற்றவர்களைத் தவிர, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை இந்திய அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்ட விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது. விசா ரத்து உத்தரவு முதன்முதலில் பிறப்பிக்கப்பட்ட வியாழக்கிழமை முதல், கிட்டத்தட்ட 1,000 பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்ததுடன், சிம்லா ஒப்பந்தம் போன்ற பிற இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |