உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி மக்கள் சிரமங்களை சந்திக்கலாம் என்பதால் உங்களிடம் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜி20 மாநாடு
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 5ஆம் திகதி மாநாடு தொடங்க உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் உச்சி மாநாடு நடைபெறும்.
இதில் ஐரோப்பிய யூனியனின் முக்கிய தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் 9, 10 திகதிகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்புக்கேட்ட மோடி
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'ஒட்டுமொத்த நாடும் ஜி20 உச்சிமாநாட்டை நடத்துகிறது. ஆனால், விருந்தினர்கள் டெல்லிக்கு வருகின்றனர். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றியடைய செய்ய டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.
நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம்.
அதற்காக டெல்லி மக்களிடம் நான் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளுக்கு போக்குவரத்து மாற்றத்தினால் செல்ல முடியாத சூழல் ஏற்படலாம்.
இம்மாநாட்டில் டெல்லி மக்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இந்திய தேசியக்கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |