நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி.., பாதுகாப்புப் பணியில் 22,000 பொலிஸார்
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்.11) சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி சென்னை வருகை
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22,000 பொலிஸார் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் மோடி நாளை காலை 11.15 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர், போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்கிறார்.
அங்கு முதல்வர் விஜய்யுடன் இணைந்து போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.

பின்னர், போரூரில் உள்ள ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதையடுத்து, கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். மேலும், ஐஐடி மற்றும் நந்தம்பாக்கம் பகுதிகளில் மக்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் பொலிஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையம், கிண்டி ஐஐடி மற்றும் சென்னை வர்த்தக மையம் ஆகிய இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போரூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் கோயில் பகுதியில் 7,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் பயணிக்கும் மெட்ரோ ரயில் பாதை முழுவதும் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும், பிரதமர் வருகையையொட்டி நாளை சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாக சில பகுதிகளில் கடைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |