இலங்கையை வலிமையாக்க வேண்டும்..ஐந்து பில்லியன் டொலர் நிதியுதவி தேவை: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
இலங்கை அரசுக்கு மேலும் ஐந்து பில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளதால் அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ளது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசியபோது, இலங்கை சந்தித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றினார்.
அப்போது இலங்கையின் அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என கூறிய அவர், இலங்கை அரசுக்கு அடுத்த ஆறு மாதங்களில் ஐந்து பில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது. அதனை பழைய நிலைக்கு வலிமையாக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள்,மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது. 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாம் பொருளாதார நிலைத்தன்மையை அடைய வேண்டும்' என தெரிவித்தார்.
Photo Credit: AP
அத்துடன், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதை உறுதி செய்வதற்காக சீனாவுடன் 1.5 பில்லியன் யுவான் மதிப்பிலான இடமாற்று விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.