மகன், தாய் உயிரிழப்பு! பலாப்பழம், குளிர்பானம் விவகாரத்தில் திடீர் திருப்பம்
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடலூரின் ஆலம்பாடி கிராமத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவரைத் தொடர்ந்து தாய் பரணியும் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பரணி மற்றும் அவரது மகன் பரணிதரன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தியதாலேயே இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
குடும்பப் பிரச்சனை காரணமாக பரணி குளிர்பானத்தில் விஷம் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னரே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.