சத்தமே இல்லாமல் சம்பவம்... டன் கணக்கில் தங்கத்தை வாங்கும் ஐரோப்பிய நாடு
தங்கத்தின் விலை சாதனை உச்சமாக 5,100 டொலரை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடொன்று சத்தமே இல்லாமல் டன் கணக்கில் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகிறது.
550 மெட்ரிக் டன்
ஐரோப்பிய நாடான போலந்தின் தேசிய வங்கியில் தங்கத்தின் இருப்பு 550 மெட்ரிக் டன் என உயர்ந்துள்ளது. இது ஐரோப்பிய மத்திய வங்கியில் தங்கத்தின் இருப்பை விட அதிகம்.

போலந்திடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 63 பில்லியன் யூரோ என்றே தெரிய வருகிறது. உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டில் மட்டும் போலந்து நாட்டு மத்திய வங்கி 100 டன்களுக்கும் அதிகமாக தங்கம் வாங்கி இருப்பு வைத்துள்ளது.
நடப்பாண்டிலும் இதனை விட அதிகமாக தங்கம் வாங்க அந்த நாடு முடிவு செய்திருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கியே 506.5 டன்கள் தங்கம் தான் கையிருப்பாக வைத்துள்ளது.
ஆனால் அதனை விட அதிகமாக தங்கத்தை வைத்திருக்கும் போலந்து தங்கள் இலக்கை 700 டன்கள் என உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது போலந்தின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கம் 28.2 சதவீதமாக உள்ளது, இது 2024-ல் இருந்த 16.9 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது.
தங்கம் கடன் அபாயமற்றது, மற்ற நாடுகளின் பணவியல் கொள்கை முடிவுகளிலிருந்து சுயாதீனமானது, மற்றும் நிதி அதிர்ச்சிகளைத் தாங்கக்கூடியது என்று போலந்து தேசிய வங்கியின் ஆளுநர் ஆடம் கிளாபின்ஸ்கி கூறியுள்ளார்.

95 சதவீதம் வங்கிகள்
போலந்து தங்கள் தங்க இருப்பை 700 டன்கள் என உயர்த்தினால் உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 12ஆவது இடத்தில் இருந்து 10ஆவது இடத்திற்கு வந்துவிடும்.
உலக தங்கக் கவுன்சிலின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மத்திய வங்கிகளில் 95 சதவீதம் வங்கிகள், அடுத்த ஆண்டுக்குள் உலகளவில் தங்க கையிருப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.

பல நாடுகள் தங்கத்தை நாணய மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்புச் சாதனமாகவும், டொலரிலிருந்து விலகி முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் கருதுகின்றன.
இருப்பினும், வருமானம் ஈட்டித் தராத தங்கத்தில் கணிசமான நிதியை முதலீடு செய்வது, பத்திரங்கள் போன்ற அதிக உற்பத்தித்திறன் கொண்ட முதலீடுகளைப் புறக்கணிப்பதற்கு வழிவகுக்கும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |