புழல் சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்.., மடக்கிப்பிடித்த பொலிஸார்
Police apprehend prisoner who escaped from puzhal prison- புழல் சிறையில் இருந்து தப்பியோடி அண்ணா நகர் பகுதியில் பதுங்கியிருந்த நேபாள கைதி சுதீப்பை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மடக்கிப்பிடித்த பொலிஸார்
புழல் சிறையில் 3,000க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், 1,000க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெண்கள் சிறையில் 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையைச் சுற்றி உயரமான மதில் சுவர்களும் மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் (23), சென்னை பாடி பகுதியில் தங்கி திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் பொலிஸார் அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி மாலை உணவு சாப்பிட சுதீப் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள், அவரது அறையில் தேடிப் பார்த்தனர்.
அப்போது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து புழல் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல், சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவரும் புழல் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ், தப்பியோடியது குறித்தும் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தப்பியோடிய இரண்டு கைதிகளையும் பிடிக்க பொலிஸார் 3 தனிப்படைகளை அமைத்துத் தேடி வந்தனர்.
இதற்கிடையே, அண்ணா நகர் பகுதியில் பதுங்கியிருந்த சுதீப்பை பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு கைதியான சுரேஷை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.