விமான பணிப்பெண்களிடம் மோசமாக நடந்த 2 பயணிகள்! பறக்கும் விமானத்தில் நடந்தது என்ன?
கனடாவில் பறக்கும் விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்ததோடு, மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் மோசமாக நடந்து கொண்டதாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Whitehorse நகருக்கு சென்ற விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி Erik Nielsen சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த இருவர் முகத்தில் மாஸ்க் அணிய மறுத்துள்ளனர்.
மேலும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். அதன்படி விமான பணிப்பெண்களை நோக்கி கத்தியபடி இருந்தனர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விமானம் விமான நிலையத்துக்கு வந்த போது அங்கு பொலிசார் தயாராக இருந்தனர்.
பின்னர் 4 அதிகாரிகள் விமானத்துக்குள் நுழைந்து இரண்டு பயணிகளை கைது செய்தனர். மது மற்றும் போதை பொருட்களை இந்த சம்பவத்துக்கு காரணிகளாக நம்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. நீதிமன்றத்தில் அவர்கள் விரைவில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கனடா அரசாங்கம் ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் தங்கள் பயணத்தின் போதும் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
மாஸ்க் அணிவதற்கு மறுப்பு தெரிவித்தால் $5,000 அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.