ஏடிஎம்முக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தில் கொள்ளை: சிக்கிய பொலிசார்
இந்தியாவின் பெங்களூருவில், ஏடிஎம்களில் பணம் நிரப்பச் செல்லும் வாகனம் ஒன்றில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிக்கியவர்களில் பொலிசார் ஒருவரும் இருப்பது தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பணம் கொண்டு சென்ற வாகனத்தில் கொள்ளை
பெங்களூருவில், புதன்கிழமையன்று, அதாவது, நவம்பர் மாதம் 19ஆம் திகதி, ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லும் CMS நிறுவன வேன் ஒன்றை, ரிசர்வ் வங்கி முத்திரையுடன் கூடிய பதிவு எண் கொண்ட கார் ஒன்றில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர்.
தங்களை இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் எனக் கூறிய அவர்கள், உங்கள் நிறுவனம் மீது விதிகளை மீறியதாக புகார் உள்ளது. நீங்கள் பொலிஸ் நிலையம் வரவேண்டும் என்றும், பணத்தை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
வேனில் வந்தவர்கள் பொலிஸ் நிலையம் நோக்கிச் செல்ல, பணம் இருக்கும் வேன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், சாரதியிடம் துப்பாக்கியைக் காட்டி 7.11 கோடி ரூபாய் பணத்தை மற்றொரு வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து விரைந்துள்ளார்கள் அந்த நபர்கள்.
உண்மையில் அவர்கள் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அல்ல. அவர்கள் திட்டமிட்டு அந்த வேனில் கொண்டுவரப்பட்ட பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
சிக்கிய நபர்களில் ஒரு பொலிசார்
இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிக்கியவர்களில் ஒருவர் ஒரு பொலிசார். மற்றவர் CMS நிறுவன முன்னாள் ஊழியர்.

சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்த அந்த CMS நிறுவன ஊழியர், அந்த பொலிசாருடன் இணைந்து நன்கு திட்டம் தீட்டி இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
அதிகாரிகள் இந்த கொள்ளை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில், கொள்ளை நடந்த இடத்தில், அந்த பொலிசாரும் CMS நிறுவன ஊழியரும் தொடர்ந்து பலமுறை மொபைலில் பேசிக்கொண்டது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 5.76 கோடி ரூபாயும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்று திருப்பதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள்.
பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |