ஏழைக் குழந்தைகள் கல்வி பயில இலவச பள்ளியை நிறுவிய பொலிஸ் கான்ஸ்டபிள்.., அவர் யார் தெரியுமா?
ஏழைக் குழந்தைகள் கற்பிப்பதற்காக இலவச பள்ளியை நிறுவிய பொலிஸ் கான்ஸ்டபிள் யார் என்பதை பார்க்கலாம்.
யார் அவர்?
டெல்லியின் குடிசைப் பகுதிகள் ஒன்றில் வசித்து வரும் 10 வயது சிறுவன் அஜய் அஹிர்வால். இந்த சிறுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி கற்க தொடங்கி தற்போது சரளமாக ஆங்கிலம் பேசுகிறான்.
அந்த சிறுவன் கூறுகையில், "இதற்கு முன்பு நான் பள்ளிக்கு சென்றதில்லை. தற்போது 5ம் வகுப்பு படிக்கும் நான் சமூக அறிவியல், இந்தி, கணிதம் மற்றும் ஆங்கிலம் படிக்கிறேன். இதில் சமூக அறிவியல் பாடம் பிடிக்கும். எனது மாமாவை போலவே நானும் காவல் துறை அதிகாரியாக வேண்டும்" என்றார்.
இதனை போலவே டெல்லி குடிசை பகுதிகளில் இருக்கும் 80 குழந்தைகள் கல்வி கற்பதற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் தான் சிங் தான் காரணம்.
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பிறந்த தான் சிங், டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வளர்ந்தார். இவருடைய தந்தை துணிகளை இஸ்திரி செய்யும் வேலை செய்து வந்தார். மேலும், சோளம் விற்று வந்தார்.
இவரது குடும்பம் நிதி சுமையால் வறுமையில் இருந்த போதிலும் படித்து சாதிக்க வேண்டும் என்று தான் சிங் உறுதியாக இருந்தார்.
இதுகுறித்து தான் சிங் கூறுகையில், "நான் ரூ.3 கட்டணத்தில் பள்ளியில் படித்தேன். எனது அப்பாவுக்கு பொலிஸாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவரால் ஆக முடியவில்லை.
நான் 2009-ம் ஆண்டு இரண்டாவது முயற்சியில், டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்" என்றார்.
இவர், கடந்த 2013-ம் ஆண்டில் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே சில குழந்தைகள் கந்தல் துணிகளை எடுப்பதை பார்த்துள்ளார். மேலும், சிறு வேலைகளையும் அவர்கள் செய்து வந்துள்ளனர். அவர்களை படிக்க வைப்பதற்கு பெற்றோர்களுக்கு வசதி இல்லை.
இதையடுத்து, 2 ஆண்டுகள் கழித்து ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிப்பதற்காக, தான் சிங் கி பாத்ஷாலா (தான் சிங் பாடசாலை) பள்ளியை நிறுவினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |