சூரிச் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பு: இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட இருவர்
சூரிச் மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலமும், படுகாயத்துடன் பெண் ஒருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் சூரிச் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் தகராறு காரணமாக தம்பதி ஒன்று காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அடுத்து Dübendorf நகர பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை முதலில் பொலிசார் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த குடியிருப்பின் மொட்டைமாடியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த நிலையில் ஆண் ஒருவரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
முதலுதவிக்கு பின்னர், காயங்களுடன் மீட்கப்பட்ட 58 வயது பெண்மணியை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதே 59 வயதான அந்த ஆண் சம்பவயிடத்தில் இறக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் உறுதியான பின்னணி தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
மட்டுமின்றி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.