விபத்தில் சிக்கிய லொறியில் திருடிய பொலிசார்: நீதிமன்றம் அதிரடி
ஜேர்மனியில், விபத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றிலிருந்து திருடிய பொலிசார் ஒருவர் தனது பணியை இழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய லொறியில் திருடிய பொலிசார்
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்தில், தனது பொலிஸ் வாகனத்தில் ரோந்து சென்ற பொலிசார் ஒருவர், விபத்தில் சிக்கிக் கவிழ்ந்து கிடந்த லொறி ஒன்றைக் கண்டுள்ளார்.
அந்த லொறியிலிருந்த குளிர்பதனப் பெட்டியிலிருந்து 20 கிலோ எடையுள்ள 9 சீஸ் பாக்கெட்களை எடுத்து தனது வாகனத்தில் ஏற்றிய அவர், அவற்றில் சிலவற்றை தன் வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார்.
திருடப்பட்ட சீஸின் மதிப்பு 554 யூரோக்கள்.
சீஸ் திருட்டைத் தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர், தான் எடுத்த சீஸின் மதிப்பு மிகவும் குறைவு என்றும், அவை கெட்டுப்போகாமல் தடுக்கவே தான் அவற்றை எடுத்ததாகவும், அவற்றில் எதையும் தான் உண்ணவில்லை என்றும் வாதம் முன்வைத்தார்.
நீதிமன்றம் அதிரடி
திருடப்பட்ட சீஸின் மதிப்பு குறைவு என்பதால் அதை திருடியதை ஒப்புக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம், திருட்டைத் தடுக்கவேண்டிய பொலிசாரே திருடியதுதான் குற்றம் என்று கூறியுள்ளது.
அத்துடன், பணியில், சீருடை மற்றும் துப்பாக்கியுடன் இருந்த பொலிசார் ஒருவர் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டதால், ஜேர்மன் பொலிஸ் துறையின் நற்பெயருக்கே அவர் பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்று கூறி, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தவிட்டுள்ளது நீதிமன்றம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |