பிரித்தானியாவில் காவலர் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
Police Officer Shot in Nottingham 4 Suspects Arrested:பிரித்தானியாவில் காவலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் 4 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவலர் மீது துப்பாக்கிச் சூடு
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4.50 மணியளவில் “ஏஞ்சல் ரோ” பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த நபர்களை காவலர் அணுகி விசாரித்த போது, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காவலரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

4 பேர் வரை கைது
தாக்குதலை அடுத்து சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பியோடிய நிலையில், அவர்களை பிடிக்க நகரம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ராட்ஃபோர்ட் எல்லைக்கு அருகே 24 வயது ஆண் மற்றும் 27 வயது, 25 வயது பெண்கள் என 3 பேரை வாகனத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் திங்கட்கிழமை அதிகாலை பெட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் 30 வயது ஆண் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.