சுவிஸ் குடிமகனிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த பொலிசார்: திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
சுவிஸ் குடிமகன் ஒருவரிடமிருந்து, அவரது நான்கு துப்பாக்கிகளையும், ஆயிரம் துப்பாக்கிக்குண்டுகளையும் பறிமுதல் செய்தார்கள் பொலிசார்.
ஆனால், அவற்றை அவரிடம் திருப்பிக் கொடுக்குமாறு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கியைப் பறித்த பொலிசார்
சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் வாழும் முதியவர் ஒருவர், பள்ளி ஒன்றின் அருகில் சுவிஸ் ராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு, தனது துப்பாக்கியைத் தொட பிள்ளைகளை அனுமதித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பொலிசார் அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளார்கள்.
அத்துடன், அவர்கள் அவருடைய வீட்டை சோதனையிட, அங்கு நான்கு துப்பாக்கிகளும், ஆயிரம் துப்பாக்கிக்குண்டுகளும் இருந்துள்ளன.
ஆயுதங்களை கவனக்குறைவாக வைத்துள்ளதாகக் கூறி, அவற்றைப் பறிமுதல் செய்தார்கள் பொலிசார்.
திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
ஆனால், அவரது துப்பாக்கியையும் துப்பாக்கிக்குண்டுகளையும் அவரிடம் திருப்பிக் கொடுக்குமாறு சூரிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு மன அழுத்தம் உள்ளதாகவும் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்வதை அவர் நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ள மன நல மருத்துவரின் அறிக்கை ஒன்று, ஆகவே அவர் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டினார்கள் பொலிசார்.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அவர் சீரான நிலைமையில் இருப்பதாகவும், அவர் இதுவரை யாரையும் தனது துப்பாக்கியைக் காட்டி மிரட்டவில்லை என்ரும் கூறியுள்ள நீதிமன்றம், அவரது ஆயுதங்களை அவரிடம் திருப்பிக் கொடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு இழப்பீடாக 5,000 சுவிஸ் ஃப்ராங்குகளையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், அந்த நபர் ராணுவ சீருடையை தவறாக அணிந்ததாகக் கூறி, அவர் 200 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |