விஜயை பார்க்க பணி நேரத்தில் அவசர விடுப்பு எடுத்த காவலர் - அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
விஜய் மதுரை வருகை
படப்பிடிப்பு முடிந்த உடன் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது, கொடைக்கானல் பகுதிகளில் ஜனநாயகன் பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள, விஜய் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து வாகனம் மூலமாக கொடைக்கானல் சென்றடைந்தார்.
மதுரைக்கு வந்த விஜயை காண, ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
விமான நிலைய வெளிப்புற சாலை வரை வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையை அசைத்து வந்த விஜயை, தொண்டர்கள் இருபுறமும் நின்று மலர் தூவி வரவேற்றனர்.
காவலர் பணியிடை நீக்கம்
இந்த வரவேற்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட காவலர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவருக்கு, நேற்றுமுன் தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
விஜய் மதுரை வந்துள்ள நிலையில், பணியில் இருந்து அவசர விடுப்பு எடுத்த கதிரவன் மார்க்ஸ், தவெக துண்டு மற்றும் பேட்ஜ் அணிந்து கொண்டு, விஜயை வரவேற்க சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனுடைய பார்வைக்கு சென்ற நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |