சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான மோசடி... பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜெனீவா பொலிசார் தொலைபேசி மோசடி ஒன்று தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
குறிப்பாக முதியவர்களைக் குறி வைக்கிறார்கள் இந்த மோசடியாளர்கள்.
குறிப்பிட்ட நபரைத் தொலைபேசியில் அழைத்து, தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்றும், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டீர்கள், அல்லது உங்கள் உறவினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார். ஆகவே, நீங்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பவர் கூறுவார்.
அத்துடன், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் அபராதம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அபராதம் குறையும், அதற்கு மேல் எந்த விசாரணையும் இருக்காது என்றும் கூறுவார் அந்த நபர்.
இந்த வகையில் இதுவரை பலர் ஏமாந்துள்ளார்கள். இதுவரை அப்படி ஏமாந்த தொகை சுமார் 800,000 சுவிஸ் ஃப்ராங்குகள்!
ஆகவே, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பொலிசார், தாங்கள் ஒருபோதும் தொலைபேசியில் பணம் கேட்பதில்லை என்று கூறியுள்ளார்கள். குறிப்பாக, மக்கள் தங்கள் உறவினர்களான முதியவர்களிடம் இந்த விடயம் குறித்து எடுத்துக் கூறி அவர்களை எச்சரிக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.