ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த பொலிசார் மரணம்: சேன்ஸலர் இரங்கல்
ஜேர்மனியில், இஸ்லாம் எதிர்ப்பு பேரணி ஒன்றின்போது, திடீரென ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில், ஒரு பொலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதில், அந்த பொலிசார் மரணமடைந்துவிட்டதாக அவரது சக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்
வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மன் நகரமான Mannheimஇல் இஸ்லாம் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவர் அங்கிருந்தவர்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார். பொலிசார் ஒருவர் உட்பட ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட, பொலிசார் ஒருவர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார்.
ஜேர்மனியை அதிரவைத்த இந்தக் காட்சிகள் அடங்கிய பயங்கர வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
Credit: AP
காயமடைந்த பொலிசார் மரணம்
அந்த கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த பொலிசார் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது சக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு கழுத்திலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவரை மருத்துவர்கள் கோமா நிலையில் வைத்திருந்தார்கள். ஆனால், அவர் சிகிச்சை பலனின்று நேற்று, அதாவது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டார்.
Credit: AP
அவரது சக பொலிசார் அவருக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், அந்த பொலிசாரின் மரணத்தால் தான் கவலையடைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்தாரியின் நிலை
இதற்கிடையில், பொலிசாரால் சுடப்பட்ட தாக்குதல்தாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆப்கன் நாட்டவரான அவரது பெயர் Sulaiman Ataee (25) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் 2013ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் வாழ்ந்துவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Credit: AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |