லண்டனில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் திடீர் தடியடி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை: 30-க்கும் மேற்பட்டோர் கைது
லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், பொலிசாருக்கு, போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படாததால், அங்கு கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒருவருடமாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகள் நடைமுறைகள் உள்ளதால், இதை முடிவுக்கு கொண்டு வரக் கோரி, லண்டனில் மக்களுக்கு போராட்டக் குழு அழைப்பு விடுத்திருந்தது.
அதன் படி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் லண்டனில் அணிவகுத்து சென்றனர்.
ஆனால், அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கூட்டத்தில் இருந்த போராட்டக்காரர்கள், சிலர் கண்ணாடி பாட்டில்களை பொலிசார் மீது வீசியும் இருந்துள்ளனர்.
இதனால், பொலிசார் உடனடியாக தங்கள் வேன்களுக்கு ஓடிச் சென்று ஒளிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி சுமார் நூறு பேர் கொண்ட குழு இன்று பொலிஸ் வாகனத்தை துரத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொலிசார் கலவர ஹெல்மட்டை அணிந்து கொண்டு, வந்து மக்களை வீட்டி செல்லுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்காத காரணத்தினால், பொலிசார் தடியடியில் இறங்கியுள்ளனர்.
அப்போது போராட்டக்காரர்கள், சுதந்திரம் வேண்டும் என்று கூச்சலிட்டுள்ளனர். பல முறை பொலிசார் எச்சரித்த போது, அவர்கள் விதிகளை மீறியதால், சுமார் 33-க்கும் மேற்பட்டோரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர், கூறுகையில், எதிர்ப்பு தெரிவிக்க அல்லது பிற நோக்கங்களுக்காக கூடியிருக்க விரும்பும் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற பொலிசார் உறுதி கொண்டுள்ளனர்.
ஆனால் நாம் இப்போது இருப்பது சாதரண நாட்கள் போன்று இல்லை, கடந்த சில வாரங்களாக லண்டன் கொரோனா வைரஸ் தொற்று விகிதத்தை அதிகம் கொண்டுள்ளது.
இது போன்ற நேரத்தில் நாம் இப்படி செயல்பட்டால், இது பொது சுகாதாரத்திற்கு மிகவும் உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதால், அதை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம் என்று கூறியுள்ளார்.




