ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாற்றாக... பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுத்த மேக்ரான்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே புதிய ஐரோப்பிய அரசியல் சமூகத்தில் இணையுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த புதிய ஐரோப்பிய அரசியல் சமூகத்தில் இணைவதன் மூலம் 27 ஐரோப்பிய நாடுகளுடன் அரசியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனவும், முக்கிய முடிவுகளில் தங்கள் கருத்தையும் பிரித்தானியா கூறலாம் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
திங்களன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், புதிய ஐரோப்பிய அரசியல் சமூகம் உருவாவதற்கு தாம் முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய அரசியல் சமூகத்தில் முழுமையாக செயலாற்ற அவர்களுக்கு வாய்ப்பாக அமையும் எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பான நடவடிக்கைகள் பத்தாண்டுகள் வரையில் தாமதமாகலாம் எனவும் மேக்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் ஏற்கனவே ஐரோப்பாவின் உறுப்பு நாடாகவும், ஐரோப்பிய குடும்பமாகவும், நமது ஒன்றியமாகவும் மாறியுள்ளது எனவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.