டி20 உலகக்கோப்பை! கடைசி பந்தில் இமாலய சிக்சரை பறக்கவிட்டு போட்டியின் தலைவிதியை மாற்றியமைத்த பொல்லார்ட்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்ற நிலையில் பொல்லார்ட் கடைசி பந்தில் அடித்த இமாலய சிக்சர் தான் ஆட்டத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது என நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்-வங்க தேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய போது கேப்டன் பொல்லார்ட் 16 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்திருந்த போது திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதற்கான காரணம் என்னவென்று இப்போது வரை வெளியாகவில்லை. இதன்பின்னர் மீண்டும் கடைசி ஓவரில் களத்துக்கு வந்த பொல்லார்ட் கடைசி பந்தில் இமாலய சிக்சரை பறக்கவிட்டார். இந்த சிக்சர் அந்த அணிக்கு முக்கிய ரன்களாக உதவியது, ஏனெனில் வங்கதேச அணி இந்த போட்டியில் வெறும் 3 ரன்களில் தோல்வியை தழுவியது.
போட்டிக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பூரன் பேசுகையில், பொல்லார்ட் நலமாக உள்ளார், மருத்துவக் குழு இன்னும் அவருடன் வேலை செய்கிறது.
அவர் ஏன் ஒரு அற்புதமான தலைவர் என்பதை நீங்கள் பார்க்கலாம், கடைசி பந்தில் அவர் அடித்த சிக்சர் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
எதிர்காலத்தில் அவர் போல ஒருவராக இருக்க முயற்சிப்போம் என கூறியுள்ளார்.