உலகில் பலரையும் வியக்க வைக்க சுவிட்சர்லாந்தின் ஈழத்தமிழர் நிகழ்வு (Video)
சுவிசு பேர்ன் நகர் வள்ளுவன் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் பூநகரியான் முருகவேளனார் நந்தினி இணையரின் மணிவிழாவினைத் தமிழ்மறையாம் திருக்குறள் ஓதி மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவரும் வேர்ச்சொல் ஆய்வாளரும், கலைச்சொல்லாக்க வல்லுநருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் செந்தமிழ் மரபில் திருக்குறள் ஓதி மலர்மாலை மாற்றல் நிகழ்ச்சியை இனிய தமிழில் சிறப்புற நடத்தி வைத்தார்.
குறித்த நிகழ்வு கடந்த 24.09.2023 அன்று நடைபெற்றுள்ளது.
சரியாக இரண்டு மணிக்கு மணி விழா நிகழ்வு தொடங்கிய நிலையில் வரவேற்பு நிகழ்வு, அடையாளம் அணிதல், திருக்குறள் நூல், திருவள்ளுவர் உருவப்படம் பல்லக்கில் ஏந்தி ஊர்வலமாக பாரம்பரிய இசைகளுடன் குமரிக்கண்டம் அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டதுடன், மாணவர்களின் நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தியிருந்தன.
உலகத்தின் வரலாற்றில் திருவள்ளுவர் திருவுருவமும் திருக்குறளும் பல்லக்கில் சுமக்கும் மரபு முதன் முதலாக சுவிட்சர்லாந்தில் திள்ளுவன் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் பூநகரியான் முருகவேள் அவர்களால் செயற்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழாழி விழாவில் விருதுகள்
சுவிற்சர்லாந்து விருதாளர்கள் சிலருக்கு (30.09.2023) கனடா ரொரன்றோவில் நிகழும் தமிழாழி விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- சென்னை எம்.யீ.ஆர் பல்கலைக்கழக மாணவன் அரியலூர் தங்க தினேசு இளந்தமிழ் விருது.
- முல்லைத்தீவு வள்ளுவர்புரம் கவிஞர் யோ.புரட்சி 1000 கவிதைகள் விருது.
- பூநகரி குமுழமுனையைச் சேர்ந்த பூநகரி முழுங்காவில் மகாவித்தியாலய உயர்தர மாணவன் அகில இலங்கை மட்டத்தில் கொழும்பில் நடைபெற்ற போட்டியில் 10.000 மீற்றரிலும், 5.000 மீற்றரிலும் முதலாம் இடம் பெற்றமையால் பூநகரிப்புகழ் விருது.
- சுவிஸ் ஓல்ரன் அம்மன் கோவில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியை இணையர் சிவகுமாரி கருணேசுவரன் நல்லாசிரியை விருது.
- சுவிஸ் பேர்ண் பெல்ப் தமிழ்ப் பாடசாலை ஆசிரியை இணையர் சியாமளாதேவி தங்கேசுவரன் நல்லாசிரியை விருது.
- சுவிஸ் நாட்டின் இளைய தலைமுறையினரான முருகன் பாசுகரனின் முற்போக்கான தமிழ்மொழி ஆர்வத்திற்காக திருக்குறள் நெறித்திருமணம் விருது.
- அம்பாறையைச் சேர்ந்த சனாதனன் தமிழகரனிற்கு நற்பணி விருது.
- நாடகர் கலைவளரி.ச.க. இரமணனுக்கு திரைக்கலைஞன் விருது.
- செல்வரத்தினம் சுரேசுகுமாருக்கு சிறந்த அறிவிப்பாளர் விருது.
- கயேந்திரசர்மாவிற்கு இயல் விருது.
- அ.நிமலனுக்கு பேச்சாளர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டு கனடாவில் வைத்து இன்றைய தினம் வழங்கி வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணிவிழா சிறப்புமலர் வெளியீடு
விழா நாயகரின் சிறப்புகளை உணர்த்தும் பூநகரியான் மணிவிழாவில் சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தலைவரும், ஆதா பைனான்ஸ் நிறுவன இயக்குனரும், பிரபல எழுத்தாளருமான முனைவர் நாகேசுவரன் அருள்ராசா ஆகிய கலாநிதி கல்லாறு சதீசு தலைமையில் மணிவிழா மலரும் வெளியீடு செய்யப்பெற்றது.
மலரின் அறிமுகத்தினை மேனாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பதிகாரியும், மனிதவளக்கலை உதவிப்பேராசிரியருமான திரு.து.சுவேந்திர்ராசாவும், மதிப்புரையைக் கல்வியாளர் திரு.அருந்தவராஜாவும் மேற்கொள்ள சரித்திர நாயகன் பூநகரியான் பொன்.முருகவேள் ஏற்புரையாற்றினார்.
விழாவில், இன்னிசை அரங்கும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், விழா மலர் ஆய்வரங்கும், வாழ்த்துரை்அரங்கும், விருது பாராட்டரங்கும் சிறப்புற நிகழ்த்தப் பெற்றன.
ஒட்டுமொத்தமாக குமரிக்கண்டம் அரங்கு எனும் பொதுவரங்காக இவ்விழா நடந்தேறியது.
விழாவின் தொடக்கத்தில் திருவள்ளுவர் திருவுருவமும் திருக்குறளும் பல்லக்கில் சுமக்கப் பெற்று அரங்கிற்குள் கொணரப்பெற்றது குறிப்பிடப்பட்டதாகும்.
சுவிட்சலாந்து பெர்ன் வள்ளுவன் தமிழ்ப்பள்ளி முதல்வர் பூநகரி பொன். முருகவேள் மணிவிழா சிறப்பாக கொண்டாடப் பெற்றது.
சுவிட்சலாந்து பேர்ன் நகரில் வள்ளுவன் தமிழ்ப்பள்ளியின் அமைப்பாளர், வரலாற்று நாயகன் செந்தமிழ் ஆசான் பூநகரி நற்றமிழர் பொன் முருகவேள் அவர்களின் அறுபதாம் ஆண்டு மணிவிழா சான்றோர்கள், தலைவர்களின் வாழ்த்துரைகளுடன் மிகச் சிறப்பாக நடந்தேறியது .
பூநகரியான் முருகவேள் அவர்கள் திருக்குறள் நெறியையும் தமிழ்ப்பற்றையும் ஊட்டி மாணவர் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் அத்துடன் சுவிசு போலும் மேற்கத்திய நாடுகளில் தமிழ்மொழிப் பாடத்தை மழலையர் முதலாகவே குழந்தைகளுக்கு முறையாகப் படிப்பிக்கச் செய்து பலரையும் எழுத படிக்க வைத்த பெருமை முருகவேள் அவர்களையே சாரும்.
கடந்த 24.09.2023 ஆம் நாள் பேர்ன் தெல் சால் , ஓஸ்டர்முண்டிகன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. இவ்விழா நாயகருக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மேன்மைமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பு வாழ்த்துச் செய்தி வழங்கியதும் குறிப்பிடத் தக்கதாகும். “வள்ளுவரைப் போற்றுவதுடன் நிற்காமல், அவர் பெயரால் கல்வி நிலையத்தை சுவிட்சர்லாந்து நாட்டிலேயே தொடங்கி, தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி, “சுவிட்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும்” என்ற ஆய்வு நூல், “பூநகரிப் பூங்கா, பூமியில் ஒரு புதையல் பூநகரி ” என்ற அவர் பிறந்த மண்ணின் பெருமைகளைப் பேசும் நூல் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
திரு. பொன். முருகவேள் அவர்களின் தமிழ்ப்பணி என்றென்றும் தொடரட்டும் ! தமிழ் இவர் தொண்டால் மென்மேலும் சிறக்கட்டும்” என முதல்வர் வாழ்த்துரை வழங்கியுள்ளார். விழாவின் தொடக்கத்தில் ஐயன் திருவள்ளுவரின் உருவம் பல்லக்கில் மாணவர்களால் ஊர்வலமாகக் கொணரப்பெற்று சிறப்புச் செய்யப்பெற்றது.
மலேசியாவிலிருந்து மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவரும் வேர்ச்சொல் ஆய்வாளரும், கலைச்சொல்லாக்க வல்லுநருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் செந்தமிழ் மரபில் திருக்குறள் ஓதி மலர்மாலை மாற்றல் நிகழ்ச்சியை இனிய தமிழில் சிறப்புற நடத்தி வைத்தார்.
இவ்விழாவில் பல்லாண்டு காலமாகத் தமிழ்பணி, மக்கள் நலப்பணி, கலைப்பணி , தமிழாசிரியப் பணி நிகழ்த்திய பலருக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்யப்பெற்றது.
மலேசியா, இத்தாலி, பிரான்சு, டென்மார்க், யேர்மன் முதலான நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவில் கலந்து முருகவேள் அவர்களை வாழ்த்திச் சிறப்பு செய்தனர். இவ்விழாவில் வள்ளுவன் பாடசாலை மாணவர்களின் படைப்புகளும் உணர்வுமிக்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
இல்லற வாழ்வில் சிறப்புற வாழ்ந்து பேர்ன் தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் புரிந்து, வள்ளுவன் பாடசாலையையும் அரசு ஏற்புடன் திறம்பட நடத்தி உலகத் தமிழ் மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெற்றுள்ள பொன். முருகவேள் நந்தினி இணையரும் அவர்தம் நன்மக்களும் மேலும் மேலும் சிறப்புகள் பல பெற்று நெடினிது வாழ்கவென பலரும் வாழ்த்தியுரைக்க விழா சிறப்புடன் நிறைவடைந்தது.
சிறுவர்களின் கைவண்ணங்கள்
மணி விழாவின் அன்று சிறுவர்களுக்காக தனியாக ஓர் சிறிய மண்டபம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான படம்வரைதல், நிறந்தீட்டுதல்,உருவங்களைச் செய்தல்,உருவங்களை வரைந்து வெட்டுதல் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிறுவர்கள் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள்.இச் சிறுவர்களை மிகவும் சிறப்பாக பராமரித்த இணையர் கௌரி செந்தூரன் அவர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
இங் மணிவிழாவிற்காக சனிக்கிழமை காலையிலிருந்து வருகை தந்து இவ்விழாவின் நிறைவு வரை உழைத்த அனைத்து எங்கள் அன்பு உள்ளங்களுக்கும் தலைசாய்த்து நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மணி விழா மலரினை சிறப்பாக அமைத்துத் தந்த இணையர் சியாமளா இன்பம் அவர்களுக்கும் மலர்க்குழுவினருக்கும் எங்களது நன்றிகள். மணிவிழாவின் போது வழங்கப்பட்ட அனைத்து விருதுகளையும் மிகச் சிறப்பாக அமைத்து உரிய நேரத்தில் அனுப்பி வைத்த தம்பி தங்க தினேசு அவர்களுக்கும் நன்றிகள்.
ஆண்டாள் மாலை அணிவித்தல்
சைவநெறிக்கூடத்தினர் ஆண்டாள் மாலை அணிவித்து, திருநிறை சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் திருமுறைகள் ஓதி, மஞ்சள்அரிசி தூவி வாழ்த்தினர்.
நிகழ்வினைச் சிறப்பாக உருத்திரசிங்கம் கனிசு (அறோல்ட்) ஒளிப்பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.