தோல்வியால் கடும் விமர்சனம்! ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்.. பயிற்சியாளர் ஆதரவு
ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகும் தகுதியுடையவர் என டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
நேற்றைய போட்டியில் டிம் டேவிட்டுக்கு அவுட் கேட்க ரிஷப் பண்ட் டிஆர்எஸ் கேட்காதது விவாதத்திற்குள்ளானது. பண்ட் மீது பலர் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நேற்றைய போட்டி குறித்து பேசும்போது, ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாகும் அளவிற்கு தகுதியுடையவர் என அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Photo Credit: BCCI/IPL
அவர் மேலும் பேசும்போது, 'ரிஷப் பண்ட் சரியான கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் இளைஞராக இருக்கிறார், இன்னும் கேப்டன்ஷிப்பை கற்றுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் என்பது அதிக அழுத்தம் நிறைந்த போட்டித் தொடர் ஆகும். அதிலும் ஒரு கேப்டனாக பண்ட் சிறப்பாக செயல்படுகிறார்.
ஆட்டம் கைநழுவி போவதில் அவர் கொஞ்சம் தளர்ந்து விட்டார், அதற்காக தோல்விக்கு அவரை குறை கூற முடியாது. வீரர்கள் இதுபோன்ற போட்டிகளில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். பண்ட் ஒரு தரமான கேப்டன், அவர் தனது அணியை எப்படி வழிநடத்துகிறார் என்பதை கடந்த சீசனில் பார்த்தோம்.
சில நேரங்களில் விடயங்கள் உங்கள் வழியில் செல்லாது, நான் இதுபோன்ற சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறேன். இதுபோன்ற தடுமாற்றங்கள் ஏற்படலாம், உங்களை நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பது முக்கியம் பண்ட். அவர் வலுவாக திரும்பி வருவார்' என்று அவர் கூறினார்.
Photo Credit: IPL