இதை செய்யுங்கள், ரன் தானாக வரும்! போராடும் கோலிக்கு முன்னாள் ஜாம்பவானின் நம்பிக்கை வார்த்தைகள்
மோசமான ஃபார்மில் இருக்கும் கோலிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ஓட்டங்களை குவிக்க தடுமாறி வருகிறார். எந்த வகை கிரிக்கெட்டிலும் அவரால் நிலையான சட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை.
இதனால் அணி நிர்வாகம் அவர் மீது அதிருப்தியில் உள்ளது. மேலும் மோசமான விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். எனினும், வெளிநாட்டு வீரர்கள் சிலரும் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான ரிக்கி பாண்டிங் தனது ஆதரவை கோலிக்கு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'கோலிக்கு நிறைய சவால்கள் உள்ளன. இது கடினமான நேரம் என்று எனக்கு தெரியும். ஆனால், இந்த விளையாட்டில் நான் பார்த்த ஒவ்வொரு வீரரும் ஒரு கட்டத்தில் அதனை சந்தித்திருக்கிறார்கள். அது ஒரு துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் அல்லது பந்து வீச்சாளராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அதை சந்தித்திருக்கிறார்கள். எப்படியோ, சிறந்த வீரர்கள் மீண்டு வருவதற்கும், பதிலளிப்பதற்கும் ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள். கோலியும் அதை கண்டுபிடிப்பதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
PC: bcci.tv
மேலும் அவர் கூறுகையில், 'அவரை சுற்றியே மக்கள் கவலைப்படுவது இன்னும் அவரை அமைதியற்றவராக தான் மாற்றும். நான் வேறு வழியில் கோலியை ஊக்கப்படுத்துவேன். அவரிடம், இது உங்களுக்கான இடம், நீங்கள் துடுப்பாட்டம் செய்ய வேண்டிய இடம் இது தான், இது எப்போதும் மாறாது. உங்களை முதலில் நம்புங்கள், கடின உழைப்பை செலுத்துங்கள், உங்களை நம்பிக்கை என்ற ஒன்றுதான் பல ஆண்டுகளாக சிறந்த வீரராக வைத்திருந்ததை உணருங்கள், ஓட்டங்கள் தானாக வந்து சேரும் என அவரிடம் கூறுவேன்' என்று தெரிவித்துள்ளார்.
PC: Twitter
அத்துடன் இந்திய அணிக்கு அவர் யோசனை கூறியுள்ளார். அதில், அணிக்கான சிறந்த சமநிலையை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு அணியை வீரர் ஒருவரை வைத்து மட்டும் உருவாக்கிவிட முடியாது. புதிய வழிகளை கண்டுபிடித்து திரும்பவும் கோலி பழைய ஃபார்மிற்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
PC: GETTY IMAGES