சிக்ஸர் அடிச்சா இவ்வளவு தூரம் போகுமா? - சாதனைப் படைத்த இந்திய வீராங்கனை
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் களமிறங்கிய இந்திய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தனர். இந்திய வீராங்கனைகளில் யஷ்டிகா பாட்டியா, கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனைத்தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50வது ஓவரின் 3வது பந்தில் 4 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 5 ஆட்டங்களிலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் பிடித்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதனிடையே இந்திய அணி ஆட்டத்தின்போது 49-வது ஓவரில், பூஜா வஸ்த்ரகர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் வீசிய பந்தை லாங் ஆன் எல்லைக்கு மேல் 81 மீட்டர் தூரத்தில் சிக்ஸர் அடித்தார். 2022-ல் இதுவரை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்த சிக்ஸர் தான், அதிக தூரத்தில் அடிக்கப்பட்ட சிக்ஸராகும்.