மேற்கிந்திய தீவுகள் அணிக்கு புதிய கேப்டன்.. களமிறங்கும் இளம் அதிரடி வீரர்!
இளம் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26 வயது இளம் வீரரான நிக்கோலஸ் பூரன், நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 203 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஐதராபாத் அணி போராடியபோது நிக்கோலஸ் பூரன் தனியாளாக 33 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
இந்த நிலையில், கீரன் பொல்லார்டு ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய தொடருக்கு தற்காலிக அணித்தலைவராக பூரன் செயல்பட்டபோது, மேற்கிந்திய தீவுகள் அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.
அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பூரன் கூறுகையில், 'பல ஜாம்பவான்கள் மேற்கிந்திய தீவுகள் அணியை வழி நடத்தி, புதிய பாதையை உருவாக்கியுள்ளனர். அந்த பாதையில் நானும் பயணிக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். கேப்டனாக நியமிக்கப்பட்டது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான விடயம்.
கேப்டனாக மேற்கிந்திய தீவுகள் அணியை பல வெற்றிக்கும், முன்னேற்ற பாதைக்கும் அழைத்தது செல்ல பாடுபடுவேன். கேப்டனாக கூடுதலாக உழைக்க வேண்டும். புதிய பொறுப்புகள் எனக்கு வந்துள்ளது' என தெரிவித்துள்ளார். நெதர்லாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், பூரன் தலைமையிலான அணி களமிறங்க உள்ளது.