கனடாவில் போப் பிரான்சிஸ்... பூர்வகுடி மக்கள் உட்பட உற்சாக வரவேற்பு
ஆறு நாள் பயணமாக கனடா வந்துள்ள போப் பிரான்சிஸ், பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உண்டு உறைவிடப் பள்ளிகளின் மீது கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்காக பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கம் பேண இந்த வாய்ப்பை போப் பிரான்சிஸ் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.
எட்மண்டனில் உள்ள விமான நிலையத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் ஆகியோர் நேரிடையாக சென்று வரவேற்றுள்ளனர்.
கனடாவில் முன்னெடுக்கப்படும் ஆறு நாள் பயணத்தை கவனமாகக் கையாள வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆறு நாட்களில் கியூபெக் சிட்டி மற்றும் இக்கலூயிட் பகுதிக்கும் போப் பிரான்சிஸ் பயணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றின் கொடுமைகளில் இருந்து உயிர் பிழைத்த அல்மா டெஸ்ஜார்லைஸ் என்ற பூர்வகுடி பெண்மணியின் கையை போப் பிரான்சிஸ் முத்தமிட்டு வரவேற்றார்.
இந்த வரவேற்பு விழாவில் கத்தோலிக்க திருச்சபை மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர் புனித ஜோசப் செமினரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கிருந்து அவர் ஆல்பர்ட்டா பகுதி பயணத்தை முன்னெடுப்பார் என கூறப்படுகிறது.
தெற்கு எட்மண்டனில் அமைந்துள்ள முன்னாள் எர்மின்ஸ்கின் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை விஜயம் செய்ய உள்ளார்.
அங்குதான் பிரான்சிஸ் கனடாவில் தனது முதல் பொது அறிக்கையை வழங்க உள்ளார், மேலும் பூர்வகுடி மக்களிடம் அவர்கள் அனுபவித்த துஷ்பிரயோகங்களுக்காக மன்னிப்பு கேட்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.