போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை
Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.
6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை போர்ட்ஸ்மவுத்தில் அகதிகள் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 6 பேரின் புகைப்படங்களை விசாரணைக்கு உதவும் வகையில் ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆங்கில கால்வாயில் அகதிகளை ஏற்றிக் கொண்டு ஈஸ்ட்னி மரீனா என்ற கப்பல் துறைமுகத்திற்கு வந்ததை அடுத்து இந்த மோதலானது வெடித்தது.

நூற்றுக்கணக்கானோர் சாலையை மறித்து பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் அங்கேயே இருக்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை கலைத்தனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினர், கடலோர காவல் படைக்கு சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சில அதிகாரிகளும் காயமடைந்தனர்.
விசாரணை மற்றும் கைது
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பொருட்டு துப்பறியும் நிபுணர்கள் பல மணி நேர காணொளி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு உதவும் வகையில் தற்போது 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
வன்முறை சம்பவம் தொடர்பில் காவல்துறை ஏற்கனவே வெள்ளிக்கிழமை, ஹாம்ப்ஷயர், பால்ஸ்ரோவ் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
மேலும் சனிக்கிழமை 16 வயது சிறுவன் ஒருவனும் இதில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.