மரணத்தை நேரில் சந்தித்த தருணம்... மறக்கவே முடியாத அந்த 7 மணி நேரம்: பிரித்தானியரின் சில்லிட வைக்கும் அனுபவம்
பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் பகுதியில் இரவு முழுவதும் லிப்டில் சிக்கிக் கொண்ட ஒரு நபர் மரணத்தை நேரில் சந்தித்ததாக தமது சில்லிட வைக்கும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
போர்ட்ஸ்மவுத் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான வர்த்தக மையத்திலேயே 27 வயதான அஜிசுல் ரெய்ஹான் என்பவருக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த நொடி லிப்ட் தரையில் மோதி விடுமோ அல்லது மூச்சுவிட முடியாதபடி காற்றில்லாமல் போய்விடுமோ என அஞ்சியதாகவும், அந்த 7 மணி நேரமும் மரண பயத்திலியே நகர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயத்தில் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போன அவர், ஒருகட்டத்தில் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். ஜூலை 17ம் திகதி குறித்த வர்த்தக மையத்தில் தனிப்பட்ட தேவைகளுக்காக சென்ற நிலையிலேயே அஜிசுல் ரெய்ஹான் சிக்கிக்கொண்டுள்ளார்.
சுமார் 10.45 மணிக்கு லிப்டில் தரை தளத்திற்கு செல்ல பொத்தானை அழுத்திய அவருக்கு, அதிர்ச்சியளிக்கும் வகையில், கொஞ்ச தூரம் நகர்ந்த லிப்டானது சட்டென்று ஒரு அதிர்வுடன் நின்று போயுள்ளது.
இதனையடுத்து அவசர உதவிக்கான பொத்தானை அழுத்தியுள்ளார் அஜிசுல் ரெய்ஹான், ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை. லிப்டு அறுந்து விழுந்திருக்கலாம் என்றே முதலில் எண்ணிய அவர், மூச்சுவிட முடியாமல் செத்துப்போய்விடுவோம் எனவும் அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவசர உதவி பொத்தான் செயல்பட்டிருந்தால், ஒரு 30 நிமிடங்களில் தாம் அங்கிருந்து வெளியேறியிருக்க முடியும் என கூறியுள்ள அவர், நீண்ட 7 மணி நேரத்திற்கு பின்னர், பகல் 5.45 மணிக்கு அந்த வர்த்தக மைய ஊழியர் ஒருவரால் மீட்கப்பட்டுள்ளார்.
சில்லிட வைக்கும் அந்த அனுபவத்தால், உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டதாக அஜிசுல் ரெய்ஹான் தெரிவித்துள்ளார். இதனிடையே, போர்ட்ஸ்மவுத் பகுதி நகர நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் தொழில்நுட்ப கோளாறினால் உதவி தாமதமானதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 24 மணி நேரமும் இயங்கும் அந்த வர்த்தக மையத்தில் ஒருவர் லிப்டில் 7 மணி நேரம் சிக்கிக்கொண்டது அங்குள்ள எவரும் கவனிக்க தவறியது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும், நள்ளிரவு முதல் 3 மணி வரையில் பாதுகாப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும், சம்பவத்தன்று அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.