'தடுப்பூசி போடலானாலும் பரவாயில்லை' பிரித்தானிய பயணிகளுக்கு அனுமதியளிக்கும் பிரபல நாடு!
பிரித்தானியாவில் இருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று போர்ச்சுக்கீசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடான போர்துகீசியத்தில் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
போர்ச்சுகலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக சர்வதேச பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது படிப்படியாக கொரோனா விதிமுறைகளை தளர்த்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு பயணத் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, தற்போது பிரித்தானிய பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
போர்ச்சுகலுக்கு வரும் பிரித்தானிய பயணிகள், இனி குறைந்தது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி கூட செலுத்தியிருக்கவேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பதிலாக, பிரித்தானிய பயணிகள் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை வைத்திருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முழுமையாக தடுப்பூசி பெறாத பிரித்தானியர்கள் போர்ச்சுகலுக்கு வந்தால், அவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதிமுறை இருந்தது.
பிரித்தானியாவின் அம்பர் பட்டியலில் இருக்கும் போர்ச்சுகல், பிரித்தானியர்களின் மிகவும் விரும்பத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், போர்ச்சுகலின் இந்த அறிவிப்பு பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால் அவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.