வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் சாதனைகள்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா சாதனைகள் படைக்க காத்திருக்கிறார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
ரசிகர்கள் அனுமதியின்றி காலி மைதனாத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய அணியின் 1000வது போட்டியாகும். இந்த தொடருக்காக காயத்திலிருந்து திரும்பியுள்ள ரோகித் சர்மா இந்தியாவின் முழு நேர வெள்ளை பந்து கேப்டனாக முதல் முறையாக செயல்பட உள்ளார்.
இந்த ஒருநாள் தொடரில் ஒரு சில முக்கிய மைல்கல் சாதனைகளை ரோகித் சர்மா படைக்க உள்ளார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 227 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா அதில் 244 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 250 சிக்சர்களை பறக்கவிட்ட முதல் இந்திய வீரர்” என்ற புதிய சாதனையை அவர் படைக்க உள்ளார்.
மேலும் ரோகித் இன்னும் 51 ரன்களை எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய பேட்ஸ்மேன் என்ற முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனை படைப்பார்.அதேசமயம் 179 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 6வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனை முந்தி படைப்பார்.