புகை பிடிப்பவர்களின் நுரையீரலைவிட மோசமாக பாதிக்கப்படும் கொரோனா தொற்றியவர்களின் நுரையீரல்: வெளியாகியுள்ள திடுக்கிடவைக்கும் எக்ஸ்ரே
அமெரிக்க மருத்துவர் ஒருவர், புகைபிடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் நுரையீரலைக் காட்டும் எக்ஸ்ரே ஒன்றையும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நுரையீரலின் எக்ஸ்ரேயையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
டெக்சாசைச் சேர்ந்த Dr Brittany Bankhead-Kendall என்னும் அறுவை சிகிச்சை நிபுணர், ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் ஒருவரின் எக்ஸ்ரே, புகைபிடிப்பதால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரின் நுரையீரலைக் காட்டும் எக்ஸ்ரே, மற்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவரின் நுரையீரலின் எக்ஸ்ரே ஸ்கியவற்றை வெளியிட்டுள்ளார்.
நுரையீரல் எக்ஸ்ரேயைப் பொருத்தவரை, அதில் எந்த அளவுக்கு நுரையீரல் கருப்பாக தெரிகிறதோ, அந்த அளவுக்கு ஒருவரது நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது, அதாவது, அவரால் அந்த அளவுக்கு ஆக்சிஜனை உள்ளிழுக்கமுடியும் என்று பொருள். புகை பிடிப்பவரின் எக்ஸ்ரேயைப் பார்த்தால் அதில் கருப்பு நிறம் குறைவாக இருப்பதைக் காணலாம்.
அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரின் எக்ஸ்ரே, கிட்டத்தட்ட வெள்ளையாகவே இருப்பதைக் காணலாம். ஆகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நுரையீரலின் நிலைமை, புகை பிடிப்பவர்களின் நுரையீரலின் நிலைமையை விட மிக மோசமாக உள்ளது.
பொதுவாக மக்கள் கொரோனாவால் உயிரிழப்பவர்களைக் குறித்து மட்டும் கவலைப்படுகிறார்கள், ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நிலைமை படு பயங்கரமாக இருக்கிறது என்கிறார் Dr Brittany. அத்துடன், இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் எச்சரிக்கிறார் அவர்.