அஞ்சலகத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.44,995 வரை வட்டி கிடைக்கும்
Post Office Time Deposit Interest Details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
அந்தவகையில், அஞ்சலகத்திலும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக கால வைப்புத் திட்டம் (Post Office Time Deposit).
அரசு ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்து நிலையான வட்டி வருமானத்தைப் பெறலாம்.
அஞ்சலக கால வைப்புத் திட்டம் என்பது வங்கிகளின் FD திட்டத்தைப் போன்றது.
இதில் ஒரே தவணையாகப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டுத் தொகைக்கும் அதற்கான வட்டிக்கும் சேர்த்து முதிர்வு காலத்தில் பணம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என நான்கு வகையான முதலீட்டுக் காலங்கள் உள்ளன.
அஞ்சலக கால வைப்புத் திட்டத்தில் 1 ஆண்டு முதலீட்டிற்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7%, 3 ஆண்டுகளுக்கு 7.1%, 5 ஆண்டுகளுக்கு 7.5% என வட்டி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 1 ஆண்டில் ரூ.7,081 வட்டியுடன் மொத்தம் ரூ.1,07,081, 2 ஆண்டுகளில் ரூ.14,888 வட்டியுடன் ரூ.1,14,888, 3 ஆண்டுகளில் ரூ.23,508 வட்டியுடன் ரூ.1,23,508 மற்றும் 5 ஆண்டுகளில் ரூ.44,995 வட்டியுடன் மொத்தம் ரூ.1,44,995 கிடைக்கும்.
அஞ்சலகத்தின் 5 ஆண்டு கால வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80Cன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.

பழைய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலான தகுதியான முதலீடுகளுக்கு வரி சலுகை பெறலாம்.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன. முன்கூட்டியே பணத்தை எடுத்தால் கிடைக்கும் வட்டித் தொகையும் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், முதலீடு செய்வதற்கு முன்பு தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகளை அருகிலுள்ள அஞ்சலகத்தில் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |