இந்திய பிரதமருக்கு அச்சுறுத்தல்... கனடாவில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மீண்டும் பரபரப்பு
கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான சாலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் மற்றும் உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, இந்திய உள்துறை அமைச்சகம், இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தியுள்ளது.
சமீபத்தில், கனடாவில் காலிஸ்தான் பிரிவினைக் குழுக்கள் வெளியிட்டுள்ள புதிய சுவரொட்டிகள், இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய பிரதமரின் படங்களை வெளியிட்டு, அவர்களை படுகொலை செய்ய அழைப்பு விடுத்துள்ளன.
சீக்கிய பிரிவினைவாத அமப்பின் தலைவரன ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவிற்கு வெளியே, இந்தியாவில் இருந்து தனி மாநிலம் uருவாக்கப்படவேண்டுமா வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்று நடத்துவது குறித்து அறிவித்து, செவ்வாயன்று இந்த சுவரொட்டிகளை காலிஸ்தான் பிரிவினைக் குழுவான SFJயின் உறுப்பினர்கள் ஒட்டியுள்ளனர்.
இதற்கு முன் ஏற்கனவே, கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளான மணீஷ் மற்றும் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
நடவடிக்கைக்கு இந்தியா வலியுறுத்தல்
இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா உயர் ஸ்தானிகரான Cameron MacKayக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் இந்திய பிரதமர் முதலானோரை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அவரிடம், ட்ரூடோ அரசு அந்த சுவரொட்டிகளை உடனே அகற்றவேண்டும் என்றும், இந்திய பிரதமர் முதலானோருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுளது.
கனடா அரசுக்கும் இதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.