காபூல் விமான நிலையத்தில் அச்சுறுத்தல்: விமானத்தை ஒத்திவைத்த சுவிஸ்
காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் புறப்பட தயாரான விமானத்தை ஒத்திவைத்துள்ளது சுவிட்சர்லாந்து.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து வெளிநாட்டவர்களும், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து உள்ளூர் மக்களும் வெளியேற முயன்று வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள், சொந்த நாட்டவர்களுடன் ஆப்கான் மக்களையும் ராணுவ விமானங்களில் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக புறப்பட தயாராக இருந்த சுவிஸ் விமானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் பெருவாரியான மக்கள் குவிந்துள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பும் நோக்கில் அப்பாவி பொதுமக்கள் முண்டியடிப்பதால், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, விமான நிலையத்திற்குள் எவரும் செல்ல முடியாத சூழலும் இதனால் உருவாகியுள்ளது. இந்த நிலையிலேயே சுவிஸ் நிர்வாகம் புறப்பட தயாரான தங்கள் விமானத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே சூழலை எதிர்கொண்ட ஜேர்மனியும் தங்கள் விமானத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காபூல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமை கடந்த சில மணிநேரங்களில் கணிசமாக மோசமடைந்துள்ளது. பல நாடுகள் தங்கள் குடிமக்கள் மற்றும் உள்ளூர் ஊழியர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றுவது தொடர்பில் மிகவும் திணறி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
மொத்தமுள்ள 35 சுவிஸ் தூதரக ஊழியர்களில் 11 பேர்கள் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர். எஞ்சியவர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.