நாமல் ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு - அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி மோசடி மனு மீதான விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (05) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது HelloCorp (Pvt.) Ltd. இல் 15 மில்லியன் ரூபாய் முறைகேடான நிதியை முதலீடு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை தொடர்பான அனைத்து பகுதிகளும் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்த விடயத்தை விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
பின்னர், விசாரணையை 2025 பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு மாற்றிய நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |