11 ஓவரில் 132 ஓட்டங்கள் இலக்கு! சிக்ஸர் மழை பொழிந்த கேப்டன்..த்ரில் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியை 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
முதல் டி20
செஞ்சுரியனில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நடந்தது. மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானதால், இன்னிங்சிற்கு 11 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் குவித்தது.
டேவிட் மில்லர் மிரட்டல்
அதிகபட்சமாக டேவிட் மில்லர் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார். ஹென்ரிக்ஸ் 12 பந்துகளில் 21 ஓட்டங்களும், மகளா 5 பந்துகளில் 18 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகளின் காட்ரெல் மற்றும் ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
@ICC
பின்னர் களமிறங்கிய மே.தீவுகள் அணியில் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அதிரடியாக 8 பந்தில் 23 ஓட்டங்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து வந்த சார்லஸ் 14 பந்துகளில் 28 ஓட்டங்களும், பூரன் 7 பந்துகளில் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ருத்ரதாண்டவம் ஆடிய பாவெல்
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒருபுறம் சிக்ஸர்களை பறக்க விட்டார். இறுதி ஓவரில் சிக்ஸர் விளாசிய அவர், வெற்றிக்கான ரன்னை சிங்கிள் எடுத்து முடித்து வைத்தார். இதனால் மே.தீவுகள் அணி 10.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
@windiescricket
அதிரடியில் மிரட்டிய பாவெல் 18 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் குவித்தார். ஒருநாள் தொடரில் சமனில் முடிந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.