உலகின் நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா - குவியும் வாழ்த்து
உலகின் நம்பர் -1 செஸ் வீரர் கார்ல்சனை தோற்கடித்து தமிழகத்தின் பிரக்ஞானந்தா என்ற 16 வயது சிறுவன் அசத்தியுள்ளார்.
ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலகின் நம்பர்-1 வீரரான கார்ல்சனும் மோதினர்.
இந்த போட்டியில் கார்ல்சன் தான் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிரக்ஞானந்தா மொத்தமாக 39 நகர்வுகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் முடித்து விட்டார். மொத்தம் 16 பேர் பங்கேற்கும் நிலையில் 8 சுற்றுகளாக இந்த தொடர் நடத்தப்படும்.
ஒவ்வொரு வெற்றிக்கு 3 புள்ளிகளும், சமனில் முடிவடைந்தால் 1 புள்ளிகளும் கொடுக்கப்படும். அந்த வகையில் பிரக்ஞானந்தா இன்று தனது 8வது சுற்றில் தான் கார்ல்சனை வீழ்த்தினார். ஆனால் பிரக்ஞானந்தாவுக்கு கடந்த சில போட்டிகள் சரியாக அமையவில்லை. முன்னதாக 7 போட்டிகளில் பிரக்ஞானந்தா ஒரு வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகள் சமன் என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 13 புள்ளிகளுடன் கார்ல்சன் 6 ஆம் இடத்தில் உள்ளார்.
அதேசமயம் உலகின் நம்பர் -1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.