பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்றவருக்கு கிடைத்த மரகதம் முதலான விலையுயர்ந்த கற்கள்: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவருக்கு உலோகப் பெட்டி ஒன்று கிடைத்தது...
அதைத் திறந்து பார்த்த அவர், அந்தப் பெட்டிக்குள், மரகதம், மாணிக்கம் மற்றும் நீலக்கல் ஆகிய விலையுயர்ந்த கற்கள் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.
ஆனால், அந்த கற்கள் வைக்கப்பட்டிருந்த உறைகளில், ’Made in India’ அதாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
உடனே, அந்த விலையுயர்ந்த கற்கள் அடக்கிய பெட்டியை உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார் அவர். அவர் பிரான்சில் உள்ள Chamonix என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
அப்போது அந்த சம்பவம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. அது நிகழ்ந்தது 2013ஆம் ஆண்டு. குறிப்பாக அவரது நேர்மை பெரிய அளவில் பேசப்பட்டது. அது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Sylvain Merly என்பவர், அந்த விலையுயர்ந்த கற்களைக் கண்டெடுத்தவர் நினைத்திருந்தால், அவரே அவற்றை வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவை அந்த மலைச்சிகரத்தில் உயிரிழந்த ஒருவருடையது என்பதை உணர்ந்த அவர் உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்துவிட்டார் என பாராட்டிப் பேசியிருந்தார்.
அந்த கற்களின் மதிப்பு 246,000 யூரோக்கள் ஆகும்.
1950ஆம் ஆண்டு மற்றும் 1966ஆம் ஆண்டுகளில், இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ஆல்ப்ஸ் மலையிலுள்ள Mont Blanc என்னும் மலைச்சிகரத்தில் விபத்துக்குள்ளாகின. அதற்குப் பின் மலையேற்றத்துக்குச் செல்வோர் அந்த விமானத்தின் பாகங்களையும், சூட்கேஸ் முதலானவற்றையும், சில நேரங்களில் மனித உடல் பாகங்களையும் கண்டெடுப்பதுண்டு.
அப்படித்தான் இந்த நபருக்கு அந்த விலையுயர்ந்த கற்கள் கிடைத்துள்ளன.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த விபத்தைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு மலையேற்றத்துக்குச் சென்ற அந்த நபருக்கு அந்த விலையுயர்ந்த கற்கள் கிடைத்த நிலையில், தற்போது, அவற்றைக் கண்டெடுத்தவருடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வதென முடிவு செய்துள்ளார்கள் Chamonix பகுதி உள்ளூர் அதிகாரிகள்.
அதன்படி, அவருக்கு 150,000 யூரோக்கள் மதிப்பிலான கற்களும், அரசுக்கு 150,000 யூரோக்கள் மதிப்பிலான கற்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து பேசிய Chamonix பகுதியின் மேயரான Eric Fournier, இந்த விடயம் ஒரு முடிவுக்கு வந்ததற்காக தன பெருமகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனது நேர்மைக்காக புகழப்பட்ட அந்த மலையேற்ற வீரருக்கு அந்த பொருட்கள் கொடுக்கப்பட்டதற்காக தான் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார் அவர்.
அந்த விலையுயர்ந்த கற்கள், இந்தியாவின் மும்பையிலிருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்தபோது ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்தக் கற்கள் இந்திய பயணி ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்ததும், இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பிரெஞ்சு அதிகாரிகள், அவற்றின் உரிமையாளர் அல்லது வாரிசு யாராவது இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்க கோரியிருந்தார்கள்.
அப்படி யாரும் இதுவரை முன்வராததால், தற்போது அவை அவற்றைக் கண்டெடுத்தவர் மற்றும் உள்ளூர் அரசுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.