புலம்பெயர்வோரை அச்சுறுத்தும் பிரீத்தியின் திட்டம் வெற்றி?: மிரண்டு போயிருக்கும் புலம்பெயர்வோர்
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்து, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தும் பிரீத்தியின் திட்டம் வெற்றி பெற்றுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆம், ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கப்படுவோம் என்றால், நாங்கள் பிரித்தானியாவுக்கே செல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள் புலம்பெயர்வோர் சிலர்.
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்க வைப்பது என பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் எடுத்துள்ள முடிவு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
அத்துடன், அந்த புலம்பெயர்வோரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டாலும் அவர்கள் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்படமாட்டார்கள், அவர்கள் ருவாண்டாவில் வாழலாம். கோரிக்கை நிராகரிக்கப்படுவோரோ தங்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்பது பிரீத்தியின் திட்டம்.
அதற்காக ருவாண்டா நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுவிட்டார் பிரீத்தி.
இந்த இப்பந்தம் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோருக்கு பயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் பிரீத்தியின் திட்டம்.
ஆக, அவர் நினைத்ததுபோலவே, புலம்பெயர்வோர் பயப்படவும் தொடங்கிவிட்டார்கள்...
பிரித்தானியாவுக்குள் நுழையும் இலக்குடன் பிரான்சிலுள்ள கலாயிஸ் துறைமுகப்பகுதியில் தங்கியிருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர். பிரித்தானியாவுக்குச் சென்றால் நான் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுவேன் என்றால், நான் பிரித்தானியாவுக்குச் செல்லவில்லை. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன், நான் ருவாண்டாவுக்குச் செல்ல விரும்பவில்லை என்கிறார் ஈரானைச் சேர்ந்த Hamid Karimi (34). அவரும் அவரது நண்பர்கள் சிலருமாக பல மாதங்களாக பிரித்தானியா செல்லும் கனவுடன் கலாயிஸ் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்.
சற்று தொலைவில் முகாமிட்டிருக்கும் சூடான் நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களோ, நாங்களே ஆப்பிரிக்காவிலிருந்துதான் வருகிறோம், திரும்பவும் நாங்கள் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல விரும்பவில்லை என்கிறார்கள்.
யாரும் ருவாண்டாவுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள் என்று கூறும் Mohammed Noor (34), அங்கே யுத்தம் இருக்கிறது, இனப்படுகொலைகள் நடக்கின்றன, அங்கு நீங்கள் சென்றால், அவர்கள் உங்களைக் கொன்றுவிடலாம் என்கிறார்.
1994ஆம் ஆண்டில், சிறுபான்மை இனத்தவரான Tutsi இனத்தவரில் 800,000 மக்கள் மூன்றே மாதத்தில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் Noor, அங்கே சென்றால் என் கதை முடிந்தது அவ்வளவுதான் என்கிறார்.
ஆக, பிரீத்தி பட்டேல் திட்டமிட்டதுபோலவே புலம்பெயர்வோர் மனதில் அவர் அச்சத்தை விதைத்துவிட்டார் என்றே கூறலாம்!