மக்கள் நலனே முக்கியம்! உயிரிழந்த 31 வயதான நிறைமாத கர்ப்பிணி பெண்...கண்களை குளமாக்கும் நெகிழ்ச்சி பின்னணி
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மக்கள் நலனே முக்கியம் என பணியாற்றிய 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா (31).
இந்த நெருக்கடியான கொரோனா தொற்று காலத்திலும் கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
விடுமுறை காலத்திலும், பணிக்கு வந்து சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு, மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 31 வயதான கர்ப்பிணி மருத்துவர், நோயாளிகளிடமும், உடன் பணியாற்றும் செவிலியர்களுடன் மிகவும் எளிமையாகவும், நட்புடன் இயல்பாகவும் பணிபுரிந்நு வந்ததாக கண்கலங்கி கூறுகின்றனர் உடன் பணிபுரிந்தவர்கள்.
மேலும் இதே போல், மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சிறப்பு காவல் படை எஸ்.ஐ. லட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 97ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து எஸ்.ஐ.யாக பதவி உயர்வு பெற்றவர். இவரது கணவர் சரவணக்குமார். மதுரை வணிகவரித் துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆத்திக் குளத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவரது உடல் இன்று காலை 9 மணி அளவில் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் தத்தனேரி மயானத்தில் அரசு வழிகாட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது.