House Owner தாக்கியதில் கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்தது.., வீடு காலி செய்வதில் முற்றிய தகராறு
வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கி கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
கருச்சிதைவு
சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் விக்னேஷ், கவிதாவர்ஷினி தம்பதியினர் வாடகைக்கு உள்ளனர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் கவிதாவர்ஷினி கருவுற்றார். அவரை, மாடிப்படி ஏறக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் விக்னேஷ் கூறியுள்ளார்.
அதற்கு 3 மாதம் வாடகை மற்றும் சுண்ணாம்பு அடிக்க ரூ.8,000 போக, நீங்கள் ரூ.4000 தர வேண்டும் என்று சுரேஷ் கேட்டுள்ளார்.
இதனை கேட்ட விக்னேஷ், நாங்கள் முன்பணமாக ரூ.40,000 கொடுத்திருக்கிறோம். பிறகு ஏன் 3 மாதம் வாடகை பணம் பிடித்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு, அட்வான்ஸ் பணம் தரமுடியாது, மீதம் 4 ஆயிரம் தந்துவிட்டு வீட்டை காலிசெய்யும்படி சுரேஷ் மிரட்டியுள்ளார்.
மேலும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விக்னேஷை தாக்க சுரேஷ் முயன்றுள்ளார். இதில் தடுப்பதற்காக குறுக்கே வந்த மனைவி கவிதாவர்ஷினியை கர்ப்பிணி என்று பாராமல் தள்ளிவிட்டார்.
அப்போது, அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டதில் கரு கலைந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்
புகார்அளித்தும் நடவடிக்கை இல்லை
இதனால், டிபி சத்திரம் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் அளித்தனர். ஆனால், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் வெங்கடேசன் இருவரும் வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று தம்பதியினரை வற்புறுத்தி உள்ளனர்.
பின்னர், வீட்டு உரிமையாளர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில், வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கூறியுள்ளனர்.