தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி
கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 28) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது.
இந்நிலையில், ஹவ்ஸியாவின் கணவர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஃபவ்ஸியாவின் உடலில் பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகத்தை நிரூபிப்பதுபோல், ஏற்கனவே அன்வர் ஃபவ்ஸியா மீது வெறுப்பில் இருந்ததாகவும், செப்டம்பர் 1ஆம் திகதி, அதாவது, ஃபவ்ஸியா கொல்லப்படுவதற்கு முந்தைய நாள், எடின்பர்கில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு தம்பதியர் சென்றிருந்த நிலையில், மனைவியை மோசமாக நடத்திய அன்வர், அவரை அச்சுறுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்வர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.