சென்னை வெள்ளத்திலிருந்து மீட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை.., 4 வருட காத்திருப்புக்கு பின் மகிழ்ச்சி
மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இருந்து மீட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்பிணி மீட்பு
மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் தீவு போல மாறியுள்ளது.
குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், மடிப்பாக்கத்தில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதியை மழைநீர் கழுத்தளவிற்கு சூழ்ந்தது. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள ஏரிகள் நிரம்பியதால் கூடுதலாக மழைநீர் ஆர்ப்பரித்துச் சென்றது.
அங்கு, அடுக்குமாடி குடியிருப்பொன்றில் சிக்கி தவித்த கற்பகம் என்ற நிறைமாத கர்ப்பிணியை படகில் அழைத்துச் சென்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பெண் குழந்தை
பின்பு, வெள்ளத்தில் இருந்து மீட்ட கற்பகம் என்ற பெண்ணை காமாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே கற்பகத்துக்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததால், 4 வருடத்திற்கு பிறகு தற்போது பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |