32 வயதான என் மகனுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை! உருக்கமாக பேசிய பிரேமலதா
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பிரச்சாரம் செய்துள்ளார்.
பிரேமலதா பிரச்சாரம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு அவனியாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "உங்கள் வீட்டு சகோதரியாக நான் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். முன்பு மதுரைக்கு வரும்போதெல்லாம் கேப்டனுடன் வருவேன். இப்போது அவர் இல்லாமல் வருவது துக்கமாக உள்ளது.
எங்களுடைய வாழ்க்கை எல்லாம் இந்த விருதுநகர் மக்களவை தொகுதி தான். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து கேப்டனின் பிள்ளைக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். கணவன் இல்லாத பெண் சமூகத்தில் எவ்வளவு பிரச்சனைகளை சமாளிப்பார் என்று உங்களுக்கு தெரியும்.
கேப்டன் என்னிடம் பெரிய பொறுப்பை விட்டுச் சென்றுள்ளார். அதை நான் செய்ய வேண்டும். அதனால் தான் என்னுடைய 32 வயது மகனை போட்டியிட வைத்துள்ளேன். இனி அவர் உங்களுக்கும் மகன் தான். இன்னும் விஜய பிரபாகரனுக்கு திருமணம் கூட ஆகவில்லை.
விஜயகாந்த் எப்படி விருதாச்சலத்தில் முதல் வெற்றி பெற்றாரோ, அதே போல் விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதி வெற்றியை தர வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |