வீல் சேரில் வந்த விஜயகாந்த்.., தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு
சென்னையில் நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு வீல் சேரில் வந்த விஜயகாந்தை கட்சி நிர்வாகிகள் கை தட்டி வரவேற்றனர்.
கூட்டத்திற்கு வந்த விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வந்தபோது அதனை பிரேமலதா மறுத்து விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதன் பின்னர், அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தான் இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், விஜயாகாந்தை பார்க்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜயகாந்த் ரசிகர்கள் திரண்டதால் திருவேற்காடு பகுதியே விழாக்கோலம் போல காட்சியளித்தது.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 12 மணிக்கு விஜயகாந்த் வந்தார்.
பிரேமலதா தேர்வு
அப்போது கேப்டன் வாழ்க என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கோஷமிட்டனர். பின்னர், பொதுக்குழு மேடைக்கு விஜயகாந்தை அவரது உதவியாளர்கள் வீல் சேரில் அழைத்து வந்தனர்.
பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைப் பார்த்து விஜயகாந்த் கையை அசைத்தார். இந்த கூட்டத்தில் தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜய்காந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |