ஒட்டாவாவை அடுத்து... அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட கனடாவின் இன்னொரு மாகாணம்
ட்ரக் சாரதிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தலைநகர் ஒட்டாவாவுக்கு அடுத்து தற்போது ஒன்ராறியோ மாகாணமும் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
குறித்த தகவலை ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிகபட்சம் $100,000 அபராதம் எனவும் இணங்காததற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஃபோர்டு, ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன், ஒன்ராறியோ அரசாங்கம் காவல்துறையை போராட்டக்காரர்களுக்கு எதிராக தூண்டிவிடவில்லை, ஆனால் சட்டத்தின்படி செயல்படவே அரசு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒன்ராறியோவின் முதல்வராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாகாணத்தில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் Freedom Convoy என்ற பெயரில் லொறி சாரதிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
லொறி சாரதிகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலையில், ஒட்டாவா பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஒன்ராறியோ மற்றும் ஆல்பர்ட்டாவிலும் இதேப்போன்ற ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கனடாவின் முக்கிய நகரங்களிலும் இதே ஆர்ப்பாட்டங்கள் லொறி சாரதிகளால் பின்பற்றப்பட்டது.
தற்போது ஒன்ராறியோவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய உத்தரவுகளுக்கு இணங்காத எவரின் தனிப்பட்ட மற்றும் வணிக உரிமங்களை ரத்து செய்ய மாகாண அரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என்று முதல்வர் ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார்.