இந்தியாவின் பெயர் "பாரத்" என மாற்றப்படுகிறதா? எழுந்தது சர்ச்சை
குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாரத் குடியரசு தலைவர்
இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், G20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினருக்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் “இந்திய குடியரசு தலைவர்” என்பதற்கு பதிலாக “பாரத் குடியரசு தலைவர்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தை பாதிக்க கூடிய காரியங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஜி20 நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த 19 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த மாதத்தின் இடைப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவும் தீர்மானம் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில் அழைப்பிதழை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்கள் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பது இதன் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய வாழ்த்தில் இந்தியா என்ற வழக்கமான பயன்படுத்துதலுக்கு பதிலாக பாரதம் என குறிப்பிட்டுள்ளார்.
அதில் “தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |